Wednesday, 30 November 2011

தொல்காப்பிய வகுப்பு


வணக்கம்

தொல்காப்பிய வகுப்பு, இது வரை, (2011), ஜோகூரில், முதல் அதிகாரத்தில் 8 இயல்கள் வரை வகுப்புகள் நடத்தப்பட்டு விட்டன.
 
தொல்காப்பியம்

அதிகாரம் 1 : 9 இயல்கள்
அதிகாரம் 2 : 9 இயல்கள்
அதிகாரம் 3 : 9 இயல்கள்


அதிகாரம் 1 எழுத்தியலாகும். முதல் அதிகாரத்தைப்பயின்றுவிட்டால் தமிழில் எழுத்துப் புணர்ச்சி தொடர்பான சந்தேகங்கள் எழ வாய்ப்பிருக்காது. முதல் அதிகாரத்தில் உள்ள 9 அதிகாரங்களில் 8 அதிகாரங்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு விட்டன‌. இன்னும் ஓர் இயல் தான் உண்டு; குற்றியலுகரம். எழுத்துப்புணர்ச்சியில் முக்கியப் பங்காற்றும் இயலாகும். இது வரை 8 இயல்களில் கலந்து கொள்ள இயலாதவர்களும் இதில் கல‌ந்து பயன் பெறலாம்.
தமிழ்சொற்புணர்ச்சியைக் கைவரப்பெற விரும்புவோர் இவ்வியலில் (குற்றியலுகரம்) கலந்துகொள்வது மிக மிக அவசியமாகும்.


மற்றுமொரு மகிழ்ச்சிச்  செய்தி. இயல் 9 (குற்றியலுகரம்) முடிந்தவுடன் தொடர்ந்து வரும் 3 வகுப்புகளில் அதிகாரம் 1 (எழுத்தியல்) மீட்பார்வை செய்யப்படும். மீட்பார்வை என்று சொல்வதை விட அதிகாரம் ஒன்றின் சுருக்கமாகும். அதிகாரம் 1ல் உள்ள 9 இயல்களில் உள்ள சொற்புணர்ச்சிக்குத் தேவையானவை, 3 வகுப்புகளில் சுருக்கமாகத் தொகுத்து விளக்கமளிக்கப்படும். இதுவரை கலந்து கொள்ள இயலாதவர்கள் குறைந்தது இம்மூன்று வகுப்புகளிலாவது கலந்து கொண்டால் அதிகாரம் ஒன்றில் உள்ள 9 இயல்களின் சாரங்களைக் கற்றுக்கொள்ள வாய்ப்பேற்படும். அதே வேளையில் தமிழ்ச் சொற்புணர்ச்சி விதிகளை முழுமையாக அறிந்தவர்களாகத் திகழ்வர்.


எனவே, தொல்காப்பியத்தின் முதல் அதிகாரத்தின் 9 இயல்கள் வகுப்புக்கு வர இயலாதவர்கள் இம்மூன்று மீட்பார்வை வகுப்புகளில் கலந்து கொண்டால் தமிழ்ச் சொற்புணர்ச்சியின் விதிகளை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.

ஆசிரியர்கள் (ஆரம்பப்பள்ளித் தமிழ் ஆசிரியர்கள், இடை நிலைப்பள்ளித் தமிழாசிரியர்கள், ஆரம்பத் தேசியப் பள்ளித்தமிழாசிரியர்கள்) கண்டிப்பாகச் சொற்புணர்ச்சியில்  புலமை பெற வேண்டும். அது நமது கற்றல் கற்பித்தல் தொழிலுக்கு மிகவும் முக்கியம். தமிழ்ச் சொற்புணர்ச்சியில் புல‌மை பெற்று, தொடர்ந்து தமிழைத் தமிழாகவே அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கின்றது. அப்பணியைச் செவ்வனே செய்வதற்குரிய தமிழறிவு நமக்குத் தேவைப்படுகின்றது. அவ்வரிய தமிழ் அறிவினைப் பெறுவதற்கான வாய்ப்பு நம்மைத் தேடி வருகிறது. இன்று  இவ்வாய்ப்பினை நாம் நழுவ விட்டால் மீண்டும் இம்மாதிரியான வாய்ப்பு நமக்குக் கிட்டுமா என்பது சந்தேகமே! இன்று, மலேசியாவில், தொல்காப்பியத் தமிழைப் புகட்டும் ஆசான் ஒருவர் உள்ளார் என்றால், அவர் திரு சீனி நைனா முகம்மது அவர்களே! அவர் இருக்கும் போதே நாம் அவரிடமுள்ள செல்வத்தைப் பெறாமல்..அவர் இல்லாத போது..நாம் வருந்திப்பயன் யாது?

சிந்தித்துச் செயல்படுவோம்!
தமிழை நாம் வளர்க்க வேண்டாம்! தமிழ் மொழி ஏற்கெனவே வளர்ந்து பெரிய ஆல மரமாய் இருக்கின்றது! அம்மரத்தைப் பட்டுப்போகாமால் பாதுகாத்தாலே நாம் தமிழுக்கும் எதிர்கால தமிழ் சந்ததியினருக்கும் செய்யும் பெருந்தொண்டாகும். நாம் செய்கிற இச்சிறுந்தொண்டு பெருந்தொண்டாகி எதிர்கால சந்ததியினரின் வாழ்த்துக்கும் போற்றுதலுக்கும் நாம்  உரியவர்கள் ஆகிவிடுவோம்!


சிந்திப்போம் தோழர்களே!


அன்புடன்
ஞா. வேதநாயகம்

No comments:

Post a Comment